Bhagavad Gita: Chapter 1, Verse 2

ஸஞ்ஜய உவாச1 |
த்3ருஷ்ட்1வா து1 பா1ண்ட3வானீக1ம் வ்யூட4ம் து3ர்யோத4னஸ்த1தா3 |
ஆசா1ர்யமுப1ஸங்க3ம்ய ராஜா வச1னமப்3ரவீத்1 ||2||

ஸஞ்ஜய உவாச---ஸஞ்ஜயன் கூறினார்; த்ருஷ்ட்வா----கவனித்த; து--ஆனால்; பாண்டவானீகம்----பாண்டவ இராணுவம்; வ்யூடம்----இராணுவ அமைப்பில் நிற்பதை; துர்யோதனஹ----மன்னன் துரியோதனன்;  ததா—--பிறகு; ஆசார்யம்—--ஆசிரியரை; உபஸங்கம்ய—--அணுகி; ராஜா—--மன்னன்; வசனம்----வார்த்தைகள்; அப்ரவீத்---- கூறினார்.

Translation

BG 1.2: ஸஞ்ஜயன்   கூறினார்: பாண்டவ இராணுவம் இராணுவ அமைப்பில் நிற்பதைக் கவனித்த மன்னன் துரியோதனன்  தனது ஆசிரியர் த்ரோணாச்சாரியரை அணுகி பின்வரும்  வார்த்தைகளை கூறினார்.

Commentary

த்ருதராஷ்டிரர் தனது மகன்கள் கண்டிப்பாக போரிடுவார்கள் என்று உறுதிமொழியை எதிர்பார்த்தார். உறுதியாக போர் நடப்பதை விரும்பிய  த்ருதராஷ்டிரரின் கவலையை ஸஞ்ஜயன்  புரிந்து கொண்டார். த்ருதராஷ்டிரரின் கவலையை தீர்ப்பதற்கான முயற்சியில் ஸஞ்ஜயன் பாண்டவர் இராணுவம் போருக்கு தயாரான  ஒரு இராணுவ அமைப்பில் இருக்கிறது என்று த்ருதராஷ்டிரருக்கு தெரிவித்தார். தொடர்ந்து த்ருதராஷ்டிரரின் மகன் துரியோதனன்  போர்க்களத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதைக் கூறினார்.

த்ருதராஷ்டிரரின் மூத்த மகன் துரியோதனன் மிகவும் தீய மற்றும் கொடூர இயல்புடையவன். த்ருதராஷ்டிரர் பார்வையற்றவராக இருந்ததால் துரியோதனன் நடைமுறையில் ஹஸ்தினாபூர் ராஜ்யத்தை அவர் சார்பாக ஆட்சி செய்தான். பாண்டவர்களிடம் கடும் வெறுப்பை கொண்டிருந்த துரியோதனன்  எதிர்ப்பு இல்லாமல் ஹஸ்தினாபுர ராஜ்யத்தை தொடர்ந்து ஆள விரும்பி பாண்டவர்களை போரின் மூலம் அழிக்க விரும்பினான். இருப்பினும், போர்க்களத்தில் நின்று, அணிவகுத்து நின்ற  பெரிய வலிமையான பாண்டவர்களின் இராணுவத்தை பார்த்த துரியோதனன் தடுமாறினான். பாண்டவர்களை குறைத்து மதிப்பிட்டு இருந்த துரியோதனனுக்கு அவர்களுடைய வலிமையான இராணுவ அமைப்பு அவனுடைய  எதிர்பார்ப்பிற்கு அப்பாற்பட்டதாக இருந்தது.

தனது பதட்டத்தைத் தணிக்கும் நோக்கத்துடன் துரியோதனன் தனது குரு துரோணாச்சாரியரை மரியாதை என்ற பாசாங்கோடு அணுகினான். குருவை இவ்வாறு அணுகிய அவனது நடவடிக்கை பாண்டவ இராணுவத்தின் மகத்தான இராணுவ அணிவகுப்பின் காரணமாக அவனது  மனதில் இந்தப் போரின் விளைவு குறித்து இருந்த பயத்தை வெளிப்படுத்துகிறது.  அடுத்த ஒன்பது வசனங்கள் துரியோதனனால் பேசப்படுகின்றன.