Bhagavad Gita: Chapter 11, Verse 48

ந வேத3யஞாத்4யயனைர்ன தா3னைர்ன ச1 க்1ரியாபி4ர்ன த1போபி4ருக்3ரை: |

ஏவம்ரூப1: ஶக்1ய அஹம் ந்ருலோகே1 த்1ரஷ்டு1ம் த்1வத3ன்யேன கு1ருப்1ரவீர ||48||

ந—--இல்லை; வேத-யஞ்ஞா—--யாகம் செய்வதால்; அத்யயனைஹி—-வேதங்களைப் படிப்பதாலோ; ந—-இல்லை; தானைஹி---- தர்மம் செய்தாலோ; ந--—இல்லை; ச--—மற்றும்; க்ரியாபிஹி--- சடங்குகளாலோ; ந—-இல்லை; தபோபிஹி----துறவறம் செய்வதாலோ; உக்ரைஹி—-கடுமையான; ஏவம்-ரூபஹ----—இந்த வடிவத்தில்; ஶக்யஹ--—நிகழக்கூடிய; அஹம்—--நான்; ந்ரி-லோகே—--மனிதர்களின் உலகில்; த்ரஷ்டும்—--பார்ப்பதற்கு; த்வத்--—உன்னை தவிர; அந்யேன--—மற்றொருவரால்; குரு-ப்ரவீர--—குரு வீரர்களில் சிறந்தவனே

Translation

BG 11.48: குரு வீரர்களில் சிறந்தவனே, வேதங்களைப் படிப்பதாலோ, யாகம் செய்தாலோ, சடங்குகளாலோ, தர்மம் செய்தாலோ, கடுமையான துறவறம் செய்வதாலோ கூட, நீ கண்டதை எந்த ஒரு மனிதனும் கண்டதில்லை.

Commentary

கடவுளின் ப்ரபஞ்ச வடிவத்தின் தரிசனத்தை வழங்குவதற்கு, வேத நூல்களைப் படிப்பது, சம்பிரதாய சடங்குகளை நிறைவேற்றுவது, கடுமையான துறவறம் மேற்கொள்வது, உணவைத் தவிர்ப்பது அல்லது தாராளமான தொண்டு செய்வது போன்ற சுய முயற்சிகள் எதுவும் போதாது என்று ஸ்ரீ கிருஷ்ணர் அறிவிக்கிறார். இது அவருடைய தெய்வீக அருளால் மட்டுமே சாத்தியம். இதுவே வேதங்களிலும் மீண்டும் மீண்டும் கூறப்பட்டுள்ளது.

1ஸ்ய நோ ராஸ்வ த1ஸ்ய நோ தே3ஹி (யஜுர் வேத3ம்)

‘ஒப்புயர்வற்ற கடவுளின் அருளின் அமிர்தத்தால் அபிஷேகம் செய்யப்படாமல், யாராலும் அவரைக் காண முடியாது.’

இதற்குப் பின்னால் உள்ள தர்க்கம் மிகவும் நேரடியானது. நமது பொருள் உடல் சார்ந்த கண்கள் ஜடப் பொருளால் உருவாக்கப்பட்டவை, எனவே நாம் காணக்கூடியவை அனைத்தும் பொருளாகும். உன்னத இறைவன் பொருள் அல்லாதவர் - அவர் தெய்வீகமானவர். ஆகவே, தர்க்கரீதியாக அவருடைய தெய்வீக வடிவத்தைப் பார்க்க நமக்கு தெய்வீகக் கண்கள் தேவை . கடவுள் ஆன்மாவின் மீது தனது கிருபையை வழங்கும்பொழுது, ​​அவர் தனது தெய்வீக சக்தியை நமது பொருள் கண்களில் சேர்க்கிறார், அப்பொழுதுதான் நாம் அவரைப் பார்க்க முடியும்.

அர்ஜுனன் தெய்வீக அருளால் கண்ட அந்த ப்ரபஞ்ச வடிவத்தை ஸஞ்ஜயனால் எப்படி பார்க்க முடிந்தது என்று ஒருவர் கேட்கலாம். கடவுளின் அவதாரமான வேத் வியாஸரின் அருளால் சஞ்ஜயனுக்கு தெய்வீக தரிசனம் கிடைத்ததாக மகாபாரதம் கூறுகிறது. போருக்கு முன், வேத் வியாஸர் தனது மாணவர் ஸஞ்ஜயனுக்கு தெய்வீக பார்வையை வழங்கினார், இதனால் அவர் போரின் விவரங்களை திருதராஷ்டிரருக்கு தெரிவிக்க முடிந்தது. அதனால், அர்ஜுனன் பார்த்த அதே ப்ரபஞ்ச வடிவத்தை அவரால் பார்க்க முடிந்தது. ஆனால் பின்னர், துரியோதனன் இறந்தபொழுது, ஸஞ்ஜயன் ​​​​துக்கத்தில் மூழ்கி, தெய்வீக பார்வையை இழந்தார்.