மற்ற எல்லா வகையான ஆன்மீக நடைமுறைகளையும் விட அன்பான பக்தியின் பாதையின் சிறந்த சிறப்பை இந்த சுருக்கமான அத்தியாயம் வலியுறுத்துகிறது. அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணரிடம் கடவுளின் தனிப்பட்ட வடிவத்தில் பக்தி கொண்டவர்கள் மற்றும் உருவமற்ற ப்ரஹ்மனை வணங்குபவர்கள் இவர்களுக்கு இடையே யாரை ஸ்ரீ கிருஷ்ணர் யோகத்தில் சிறந்தவராக கருதுகிறார் என்று கேட்பதில் இருந்து இந்த அத்தியாயம் தொடங்குகிறது. இரண்டு பாதைகளும் கடவுளை உணர்தலுக்கு இட்டுச் செல்கின்றன என்பதை அறிவிப்பதன் மூலம் ஸ்ரீ கிருஷ்ணர் பதிலளிக்கிறார். இருப்பினும், அவர் தனது தனிப்பட்ட வடிவத்தின் பக்தர்களை சிறந்த யோகிகளாகக் கருதுகிறார்.கடவுளின் ஆள்மாறான வெளிப்படாத அம்சத்தைப் பற்றிய தியானம் உடலமைக்கப்பட்ட உயிரினங்களுக்கு மிகவும் கடினமானது என்று அவர் விளக்குகிறார். ஆனால் கடவுளின் தனிப்பட்ட வடிவத்தின் பக்தர்கள், தங்கள் விழிப்புணர்வு நிலையை கடவுளுடன் ஒருங்கிணைத்து மற்றும் அவர்கள் செய்யும் அனைத்து செயல்களையும் அவருக்காக அற்பணித்து வாழ்க்கை மற்றும் இறப்பு சுழற்சியிலிருந்து விரைவாக விடுதலை பெறுகின்றனர். ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வாறு அர்ஜுனனிடம் தனது புத்தியை ஒப்படைத்து, அவர் மீது மட்டுமே பிரத்யேக அன்பான பக்தியில் தனது மனதை நிலைநிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறார்.
இருப்பினும், போராடும் ஆன்மாவுக்கு அத்தகைய அன்பு பெரும்பாலும் கிடைக்காது. எனவே, ஸ்ரீ கிருஷ்ணர் வேறு சாத்திய கூறுகளை கூறுகிறார். மேலும் அர்ஜுனனால் கடவுளில் உடனடியாக மனதை முழுமையாக நிலை நிறுத்த இயலாவிட்டால், அந்த முழு நிலையை அடைய அவர் தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும் என்று கூறுகிறார். பக்தி என்பது ஒரு மர்மமான வரம் அல்ல, வழக்கமான முயற்சியால் வளர்த்துக்கொள்ள முடியும். அர்ஜுனனால் இவ்வளவு கூட செய்ய முடியாவிட்டால், அவர் தோல்வியை ஒப்புக்கொள்ளக் கூடாது; மாறாக, ஸ்ரீ கிருஷ்ணரின் மகிழ்ச்சிக்காக பக்தியுடன் உழைக்க வேண்டும்... இதுவும் முடியாவிட்டால், பின்னர் அவர் தனது செயல்களின் பலனைத் துறந்து சுயத்தில் நிலைபெற வேண்டும். பின்னர் அவர் இயந்திர நடைமுறையை விட உயர்ந்தது அறிவை வளர்ப்பது; அறிவை வளர்ப்பதை விட உயர்ந்தது தியானம்; மற்றும் தியானத்தை விட உயர்ந்தது செயல்களின் பலனைத் துறப்பது, இது உடனடியாக பெரும் அமைதிக்கு வழிவகுக்கும் என்று விளக்குகிறார்.
அத்தியாயத்தின் மீதமுள்ள வசனங்கள் கடவுளுக்கு மிகவும் பிரியமான அன்பான பக்தர்களின் அற்புதமான குணங்களை விவரிக்கின்றன.
 
 
    
        
            
            
                அர்ஜுனன் வினவினார்:  உங்களுடைய தனிப்பட்ட வடிவில் உறுதியுடன் அர்ப்பணிப்புடன் இருப்பவர்களுக்கும், உருவமற்ற ப்ரஹ்மனை வழிபடுபவர்களுக்கும் இடையே, யோகத்தில் யாரை நீங்கள் மிகச் சிறந்தவர்களாகக் கருதுகிறீர்கள்?
            
         
    
        
            
            
                பகவான் கூறினார்: எவர்கள் தங்கள் மனதை என்னிடத்தில் நிலைநிறுத்தி, எப்போதும் என் பக்தியில் உறுதியான நம்பிக்கையுடன் ஈடுபடுகிறார்களோ, அவர்களை நான் சிறந்த யோகிகளாகக் கருதுகிறேன்.
            
         
    
        
            
            
                ஆனால் தங்கள் புலன்களைக் கட்டுப்படுத்தி, எல்லா இடங்களிலும் ஒரே எண்ணத்துடன் அனைத்து உயிர்களின் நலனில் ஈடுபட்டு முழுமையான அழியாத, வரையறுக்க முடியாத, வெளிப்படுத்தப்படாத எங்கும் நிறைந்த, நினைக்க முடியாத, மாறாத, நித்தியமான மற்றும் அசையாத முழுமையான உண்மையின் உருவமற்ற அம்சத்தை வணங்குபவர்களும் என்னை அடைகிறார்கள்.
            
         
    
        
            
            
                வெளிப்படுத்தப்படாதவற்றில் மனதைக் கொண்டவர்களுக்கு, உணர்தலின் பாதை இன்னல்கள் நிறைந்ததாக இருக்கும். வெளிப்படுத்தப்படாததை வழிபடுவது உடலமைந்த உயிரினங்களுக்கு மிகவும் கடினம்.
            
         
    
        
            
            
                ஆனால், என்னையே உயர்ந்த குறிக்கோளாகக் கருதி, என்னையே வணங்கி, என்னையே பிரத்யேக பக்தியுடன் தியானித்து, தங்கள் செயல்களை எல்லாம் எனக்கே அர்ப்பணிப்பவர்களை, பிறப்பு இறப்புக் கடலில் இருந்து விரைவாக விடுவிப்பேன், ஏனெனில் அவர்களின் உணர்வு என்னுடன் இணைந்திருக்கிறது.
            
         
    
        
            
            
                உன் மனதை என்னிடமே நிலைநிறுத்தி உன்னுடைய புத்தியை என்னிடம் ஒப்படைத்து விடு. இவ்வாறு நீ எப்போதும் என்னில் நிலைத்திருப்பாய்.
            
         
    
        
            
            
                அர்ஜுனன், உன்னால் என்மீது மனதை நிலையாக நிலை நிறுத்த முடியாவிட்டால், உலக விவகாரங்களிலிருந்து மனதைத் தொடர்ந்து அடக்கிக்கொண்டு பக்தியுடன் என்னை நினைவுகூறப் பழகு.
            
         
    
        
            
            
                பக்தியுடன் என்னை நினைவு செய்வதை  உன்னால் பயிற்சி செய்ய முடியாவிட்டால், எனக்காக உழைக்க முயற்சி செய். இவ்வாறு, எனக்கு பக்தியுடன் சேவை செய்வதால், நீ  பூரண நிலையை அடைவாய்.
            
         
    
        
            
            
                பக்தியுடன் உன்னால் எனக்காக உழைக்க முடியவில்லை என்றால், உன் செயல்களின் பலன்களைத் துறந்து சுயத்தில் நிலைபெற முயற்சி செய்.
            
         
    
        
            
            
                உடல் பயிற்சியை விட அறிவு சிறந்தது, அறிவை விட தியானம் சிறந்தது, தியானத்தை விட செயல்களின் பலனைத் துறப்பது சிறந்தது, அத்தகைய துறப்பினால் ஒருவன் மன அமைதியை அடைகிறான்.
            
         
    
        
            
            
                எல்லா உயிர்களிடத்தும் துவேஷம் இல்லாத, நட்பும் கருணையும் கொண்ட அந்த பக்தர்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள். மகிழ்ச்சி மற்றும் துன்பத்தில் சமன்படுத்தப்பட்ட அவர்கள் உடமைகள் மற்றும் அகங்காரத்தின் மீதான பற்றுதலிலிருந்து விடுபட்டவர்கள்,  மற்றும் எப்போதும் மன்னிப்பவர்கள். எப்பொழுதும் மனநிறைவு நிறைந்த அவர்கள், பக்தியில் என்னுடன் சீராக ஒன்றுபட்டவர்கள், சுய கட்டுப்பாடு மற்றும்  உறுதியான தீர்மானத்துடன், மனத்திலும் புத்தியிலும் எனக்கே அர்ப்பணிக்கப்பட்டவர்கள்.
            
         
    
        
            
            
                யாரையும் தொந்தரவு செய்யாதவர்களும், யாராலும் கிளர்ச்சியடையாதவர்களும், இன்பத்திலும் துன்பத்திலும் சமமாக இருப்பவர்களும், பயம் மற்றும் கவலைகள் இல்லாதவர்களும், அத்தகைய என்னுடைய பக்தர்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள்.
            
         
    
        
            
            
                உலக ஆதாயங்களில் அக்கறையற்றவர்களும், புறமும், அகமும் தூய்மையானவர்களும், திறமைசாலிகளும், கவலைகள் அற்றவர்களும், தொல்லை இல்லாதவர்களும், சுயநலம் இல்லாதவர்களும் ஆன என்  பக்தர்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள்.
            
         
    
        
            
            
                இவ்வுலக இன்பங்களில் மகிழ்ச்சியடையாதவர்ககள், உலகத் துன்பங்களில் விரக்தியடையாதவர்கள், எந்த நஷ்டத்திற்காகவும் வருந்தாதவர்கள், எந்த ஆதாயத்திற்காகவும் ஏங்காதவர்கள், நன்மை மற்றும் தீமை செயல்களை துறப்பவர்கள், பக்தி மிக்கவர்கள், எனக்கு மிகவும் பிரியமானவர்கள்
            
         
    
        
            
            
                அவர்கள், நண்பர் மற்றும் எதிரி இருவரிடம் சமநிலையில் இருப்பவர்கள்; மரியாதை மற்றும் அவமரியாதை, குளிர் மற்றும் வெப்பம், மகிழ்ச்சி மற்றும் துக்கம் ஆகியவற்றில் சமமாக இருப்பவர்கள்; சாதகமற்ற தொடர்புகளிலிருந்து விடுபட்டவர்கள்;  புகழ்ச்சி மற்றும்  பழிச் சொற்களை ஒரே மாதிரியாக ஏற்றுக் கொள்பவர்கள், அமைதியான சிந்தனையில் ஈடுபடுபவர்கள், வசிப்பிடத்தின் மீது பற்று இல்லாதவர்கள், கிடைக்கப்பெற்றதில் திருப்தி அடைபவர்கள், என்னில் புத்தியை உறுதியாக  நிலைத்து இருப்பவர்கள், என்னிடத்தில் பக்தி மிக்கவர்கள். அத்தகையவர்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள்
            
         
    
        
            
            
                இங்கு அறிவிக்கப்பட்ட இந்த ஞான அமிர்தத்தை மதித்து, என்மீது நம்பிக்கை வைத்து, என்னையே உயர்ந்த குறிக்கோளாகக் கொண்டு அர்ப்பணிப்புடனும் நோக்கத்துடனும் இருப்பவர்கள், எனக்கு மிகவும் பிரியமானவர்கள்.